×

10 ஆண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த மோடிக்கு தமிழ்நாடு மீது திடீர் பாசம் ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: 10 ஆண்டு காலம் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த பிரதமர் மோடி, தேர்தலுக்காக தமிழ்நாடு மீது திடீர் பாசம் காட்டுவது ஏன் என்றும், தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக மற்றும் பாஜ கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக தவிர மற்றவை உதிரி கட்சிகளாக உள்ளன. அதேபோன்று பாஜ கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு எதிரணி என்பதில் அதிமுக, பாஜ இடையே கடும் போட்டி நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட இரண்டு இயற்கை பேரிடர்களின் போது மக்கள் தத்தளித்தனர். அப்போது பார்வையிட பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ தமிழ்நாட்டுக்கு வருகை தரவில்லை என்பது தமிழக மக்களின் கொந்தளிப்பாக உள்ளது. அதே நேரம் பேரிடர் நிவாரணத் தொகையைாக தமிழ்நாடு அரசு ஒன்றிய பாஜ அரசிடம் கேட்டும், எந்தவித நிவாரண தொகையும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்காதது மக்கள் மத்தியில் பாஜ மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 5 முறை வந்திருக்கிறார். அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தாலும் அவர் மீதான அதிருப்தி மக்களிடம் கொஞ்சமும் குறையவில்லை என்றே கூறப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவது தவறில்லை. பெருமழையால் தத்தளித்த போது வராத பிரதமர் இப்போது தேர்தலுக்கு வருவது ஏன் என்று தொடர்ந்து தனது பிரசாரத்தில் கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால் பிரதமர் மோடியிடம் இருந்தோ, பாஜ தலைவர்களிடம் இருந்தோ இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் தரவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் 3 கேள்விகள் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பத்தாண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1 தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?.

2 இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3 பத்தாண்டுகால பா.ஜ. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே. பதில் சொல்லுங்க மோடி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 10 ஆண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த மோடிக்கு தமிழ்நாடு மீது திடீர் பாசம் ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Kumbakarna ,Chief Minister ,M.K.Stalin Devitt ,Chennai ,M. K. Stalin ,Tamil ,Nadu ,CM ,Stalin ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...